Saturday, February 16, 2013

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.


சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள். வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச்சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

No comments: