அழகு மிளிரும் அந்தமான் !!!!
வங்கக்கடல் தனது மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கும் வனப்புமிக்க தீவுக்கூட்டம்தான் அந்தமான், நிகோபர். இவை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. வங்கக்கடலில் வடக்கில் இருந்து தெற்காக சுமார் 700 கி.மீ நீளத்துக்கு விரிந்து கிடக்கும் இந்த தீவுக்கூட்டங்களில் மொத்தம் 36தீவுகளில்தான் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற தீவுகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. இவற்றில் அரிய வகை விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் நிறையவே
உண்டு. அழகு மிளிரும் அந்தமான் நிகோபர் தீவுகளில் கண்டு களிக்க நிறைய இடங்கள் உள்ளன.
அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ்:
நீர்விளையாட்டுக்களில் ஆச்சரியப்படுத்தும் வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் இங்கு உள்ளன. இவற்றில் சாதாரண நீர்சறுக்கு விளையாட்டு, சாகச நீர்சறுக்கு விளையாட்டுக்களும் உண்டு. இரண்டு வகைகளுக்கும் தனித்தனி நேரங்கள் வைத்து உள்ளனர்.
மீன் காட்சியகம்:
அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ் அருகில் மீன் காட்சியகம் அமைந்து உள்ளது. இந்திய பசிபிக் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் காணப்படும் மீன்வகைகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கண்களுக்கு மட்டும் அல்ல அறிவுக்கும் விருந்தளிக்கிறது இந்த மீன்காட்சியகம்.
பறவைத்தீவு:
தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 25கி.மீ தொலைவில் பறவைத் தீவு உள்ளது. மாங்குரோவ் காடுகளும், மனதைக் கவரும் கடற்கரையும் இதன் சிறப்பம்சம். இங்கு ஒரு மலைக்குன்றின் மீது வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கிருந்து பறவைத்தீவின் மொத்த அழகையும் காண முடியும்.
சயின்ஸ் சென்டர்:
போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த அறிவியல் மையத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் எப்படி உருவாயின என்பதைப் பற்றியும் அவற்றின் அறிவியல் பூர்வமான உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். புகைப்படங்கள், மாதிரிகள் என நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன.
நிகோபர்:
1841 சதுர அடி பரப்பளவில் 28 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமே நிகோபர் என அழைக்கப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் இந்தத் தீவுகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. நீண்ட வால் கொண்ட குரங்குகள், அரிய வகை புறாக்களை இங்கு காணலாம். இதே போல 28 தீவுக்கூட்டங்களைக் கொண்ட கார்நிகோபர் தீவும் பல சிறப்புத்தன்மைகளைக் கொண்டது.
அந்தமான் சிறைச்சாலை:
இந்திய சுதந்திரபோராட்டத்துக்கும் அந்தமான் சிறைச்சாலைக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டு விலங்குகளைப்போல சித்ரவதை செய்யப்பட்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் ஏராளமானோர் இங்கு 20ஆண்டுளுக்கு மேலாக தங்களது வாழ்நாளை தனிமைச் சிறையில் கழித்து இருக்கிறார்கள்: போர்ட் பிளேயரில் பிரம்மாண்டமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கும் இந்த சிறைச்சாலை, நாம் சுதந்திரமாக இருப்பதற்காக நம் முன்னோர்கள் இங்கு அனுபவித்த கொடுமையை நினைவு படுத்தி வருகிறது.
இவை தவிர அந்தமான் மற்றும் நிகோபரில் பாரஸ்ட் மியூசியம், மகாத்மா காந்தி மெரைன் நேஷனல் பார்க், மவுண்ட் ஹாரியட், ரோஸ் ஐலண்ட், விப்பர் ஐலண்ட், கிரேட் நிகோபர் என பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அந்தமான் நிகோபர் நிர்வாகம் சார்பில் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் தீவு சுற்றுலா விழா (ஐலண்ட் டூரிசம் பெஸ்டிவல்) இங்கு பிரபலம். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பங்கேற்க வருகிறார்கள்.
சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. மேலும் சென்னை, கொல்கத்தாவில் இருந்து விமானங்களும் இயக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment