தாமிரபரணியின் தாலாட்டில் உயிர்த்திருக்கும் அழகிய நதிக்கரை நகரம். திருநெல்வேலி ஸ்தல வரலாற்றுப்படி இறைவனுக்கு அமுது படைக்க நெல்லையப்பர் சந்நிதியில் நெல்லை உலர்த்தும்போது பெய்த மழையானது நெல் நனையாமல் வேலி போல் தடுத்ததால் திருநெல்வேலி என பெயர் பெற்றது. பிற்கால பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் இது விளங்கியுள்ளது. தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியை நிறுவிய விஸ்வநாத நாயக்கர் 1560 ஆம் ஆண்டு இந்நகரை மறுநிர்மாணம் செய்துள்ளார்.
அம்பாசமுத்திரம்
கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.
ஆத்தங்கரை பள்ளிவாசல்
நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும்
இடம் இது.
அய்யனார் சுனை
நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.
குற்றாலம்
பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி.தவிர்க்க முடியாத கோடைக்கால சுற்றுலாத் தலம். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை இங்கு சாரல் பருவகாலம் தொடரும். குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
குற்றாலநாதர் கோயில்
பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான். தொலைபேசி - 04633-210138.
மாவட்ட அறிவியல் மையம்
தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு கடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.
களக்காடு வனவிலங்கு சரணாலயம்
நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் .அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் எனினும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.
கிருஷ்ணாபுரம்
நெல்லையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் இது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.
மாஞ்சோலை
நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
குறுக்குத்துறை முருகன் கோயில்
தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகன் கோயில் கொண்டிருக்கும் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
நாங்குநரி
நெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் பேதமின்றி கூடிவாழும் அழகிய ஊர்.
மணிமுத்தாறு அணை
நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது. அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது.
கழுகுமலை
சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.
முருகன் கோயில்
முருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.
அருங்காட்சியகம்
நெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது ஒரு பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியகமாகும். அனுமதி இலவசம்.
பாபநாசம்
பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இது பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. பாபநாசம் நீர்வீழ்ச்சி இதன் அருகில்தான் உள்ளது. நெல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.
நம்பி மலை
ஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். இந்தக் குன்றில் நம்பியாண்டவர் குடி கொண்டுள்ளார். மலை நம்பி என்றும் இவரை அழைக்கிறார்கள். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.
பத்தமடை
மென்மையான கைக்குள் சுருட்டும் அளவு நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது. சுவாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.
சாலைக் குமரன் கோயில்
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இந்தக் கோயில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்காக 1965 இல் வெற்றி விருது பெற்றது.
கும்பருட்டி அருவி
குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.
பொட்டல் புதூர் தர்கா
1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான தர்கா. இந்தத் தர்காவின் கட்டட அமைப்பு இந்திய கட்டடக் கலையைச் சார்ந்தது. இங்கு நடக்கும் வழிபாடும்கூட இந்துக்களின் சாயலை ஒத்ததாகவே இருக்கும். இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். தொலைபேசி - 04634-240566.
நெல்லையப்பர் - காந்திமதி கோயில்
நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும்தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள். தொலைபேசி - 0462 - 2339910.
சங்கரன் கோயில்
சிவனும், பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணர் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு. நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். தொலைபேசி - 04636-222265.
முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம்
நெல்லையிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதன் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது. தொலைபேசி - 04364-250594.
தென்காசி - காசி விஸ்வநாதர் கோயில்
வடநாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் இது தென்னாட்டில் உள்ள காசி. தென்காசி பேருந்து நிலையம் அருகில்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோயிலின் நீளம் 554 அடி அகலம் 318 அடி. இதன் பிரமாண்டமான கோபுரத்தை 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். 1924 ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோபுரம் தகர்ந்து விழுந்தது. சமீபத்தில் 168 அடி உயரத்தில் மீண்டும் அந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் 1927 ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. தொலைபேசி - 04633-222373.
திருக்குறுங்குடி
மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். புராணங்களில் நாராயணன் வந்து இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்
திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 1826 ஆம் ஆண்டு ரெவரன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
திருவிடைமருதூர்
நெல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்கு அதலநாதர் மற்றும் நரம்புநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாது விஜயநகரப் பேரரசின் கட்டுமான சிற்பக் கலைகளையும் பிரதிபலிக்கும் சாட்சியாக இருந்து வருகிறது.
வளநாடு
இந்த இடத்தை மான்களின் சரணாலயமாக அரசு அறிவித்து வருகிறது. நெல்லையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றுப் பகுதியில் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை துப்பாக்கிப் பயிற்சி நிலையம் ஒன்றும் உள்ளது.
திருவள்ளுவர் இரட்டைப் பாலம்
இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்.
வளநாடு பிளாக்பக் சரணாலயம்
தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
முகவரி - மாவட்ட வனத்துறை. திருநெல்வேலி பிரிவு. கொக்கிரகுளம். திருநெல்வேலி - 627 009.
கப்பல் மாதா தேவாலயம்
நெல்லையில் இருந்து 72 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் சிறிய தேவாலயம். கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 1903 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயம் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கன்னிகா மடத்தில் சென்று இரவில் தங்கும் இளம் பக்தைகளுக்கு அங்குள்ள மாதாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிவதாக் கூறப்படுகிறது. ஆனால் ஓரு மெழுகுவர்த்தி கூட இந்த ஆலயத்தில் ஏற்றப்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
பூலித்தேவன் நினைவகம்
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன் கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவனோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
குற்றால சாரல் விழா - ஜூலை மாதம் குற்றாலத்தில் நடக்கும் குளு குளு விழா. சாரல் பருவத்தைக் கொண்டாடும் விழா.
இடம் இது.
No comments:
Post a Comment