Wednesday, November 20, 2013

ஊட்டி


நீலகிரி :
சர்வதேச சுற்றுலா பயணிகள் குவியும் இடங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை கம்பளம் விரித்த புல்வெளிகள், வனங்கள், தேயிலை தோட்டங்கள், அருவிகள், அணைகள் என எக்கசக்க இடங்கள் உள்ளன.

ஊட்டி
alt

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், மரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா அணை ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். இவற்றை பார்க்க சர்க்யூட் பஸ் இயக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம். வாடகை வாகனங்களும் உள்ளன. சாதாரண நாட்களில் ரூ.800, சீசனில் ரூ.1300 வரை வசூலிக்கிறார்கள். நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் அரிய வகை
மலர்கள், மரங்கள், மிதக்கும் பூங்கா, பெரணி இல்லம், ஆர்கிட் மலர் கண்ணாடி மாளிகை என வியப்பூட்டும் பல அம்சங்கள் உள்ளன. ஊட்டி ஏரியில் மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.300 முதல் 450 வரை கட்டணம். 8 முதல் 15 பேர் வரை செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 2,623 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டாவை பார்க்க நுழைவு கட்டணம் ரூ.5.
ஊட்டியில் கோடை சீசன் மார்ச் இறுதி வாரத்தில் துவங்கி ஜூன் முதல் வாரம் வரை நடக்கும். 2-வது சீசன் செப்டம்பர் டு நவம்பர். முதல் சீசனில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரோஸ்கார்டனில் மே 7, 8-ம் தேதிகளில் ரோஜா கண்காட்சியுடன் கோடை விழா துவங்குகிறது.

குன்னூர்
altஊட்டிக்கு கீழே 19 கி.மீ. தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீ. தூரத்திலும் உள்ளது. குன்னூரில் ருத்ராட்சை, சாம்பிராணி உள்ளிட்ட 1200 அரியவகை மரங்களை கொண்ட சிம்ஸ் பார்க், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின் நோஸ் பள்ளத்தாக்கு காட்சி முனை, பக்காசூரன் மலை, காட்டேரி நீர்வீழ்ச்சி ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். சில இடங்களுக்கு பஸ் வசதி இல்லை. வாடகை வாகனங்களில் செல்லலாம்.

கோத்தகிரி
மேட்டுப்பாளையத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், ஊட்டியில் இருந்து கீழே 21 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கோத்தகிரியில் கோடநாடு காட்சி முனை, கேத்ரீன், உயிலட்டி நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா உள்ளன. எதற்கும் நுழைவு கட்டணம் கிடையாது. கோத்தகிரியில் இருந்து செல்ல வாடகை வாகன வசதி கிடையாது. குன்னூரில் இருந்து ஆயிரம் ரூபாய் பேக்கேஜில் செல்லலாம்.

முதுமலை
alt

ஊட்டியில் இருந்து 67 கி.மீ. தொலைவிலும், கூடலூரில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும் முதுமலை உள்ளது.  321 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் பார்க்க வேண்டிய இடம். தினமும் காலை 6.30 மணி முதல் 10 மணி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை சவாரி நேரம். வாகனத்தில் நபர் ஒருவருக்கு ரூ.35 கட்டணம். யானை சவாரிக்கு ரூ.460. இதுதவிர ஊசிமலை காட்சி கோபுரம், நாடுகாணி மரபியல் பூங்காவும் உள்ளன.

பஸ்வசதி
சென்னை, மதுரை, திருச்சியில் இருந்து ரயில் மூலம் கோவை வந்து அங்கிருந்து ஊட்டி செல்லலாம். சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் மேட்டுப்பாளையம் வந்து, மலை ரயிலில் ஊட்டி செல்லலாம். நடுவழியில் நிற்பதாக அடிக்கடி செய்தி வந்தாலும் மலை ரயிலில் பயணம் செய்வது சுகமான அனுபவம்தான். இது தினமும் காலை 7.10-க்கு புறப்படுகிறது. கோவையில் இருந்து ஊட்டிக்கு வாடகை காரில் காலையில் சென்று மாலையில் திரும்ப கட்டணம் ரூ.2200.

தங்குமிடம்
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதியில் ஏராளமான லாட்ஜ், ஓட்டல்கள், காட்டேஜ்கள் உள்ளன. வாடகை ரூ.400 முதல் 15 ஆயிரம் வரை. சைனீஸ், பஞ்சாபி, நார்த் இண்டியன், செட்டிநாடு, ஆந்திரா, சவுத் இண்டியன் என அனைத்து வகையான உணவுகளும் ஊட்டியில் கிடைக்கும்.

No comments: