Wednesday, November 20, 2013

கடலூர்

கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். முக்கிய வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள் என்று பல பெருமைகள் இம்மாவட்டத்திற்கு உரியது. புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்த்துக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி கண்ட வள்ளலார் பிறந்த வடலூர் என பல சிறப்புகள் உண்டு.

சிதம்பரம்
சிதம்பர ரகசியம் தெரியாதவர்கள் உண்டா! சிதம்பரம் நடராசர் நாட்டியக் கலையின் கடவுள். இந்த பிரமாண்டக் கோயிலில் உள்ள நடனச் சிலைகள் ஒயிலும் எழிலுமாய் அழகுற அமைந்துள்ளன. தென்னாடுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபையும் இதுதான். இந்த அடைமொழிக்குப் பொருத்தமாக நடராசர் ஆலயத்தின் மேற்கூரையை பொன்னால் வேய்ந்து பொலிவூட்டினான் பராந்தகச் சோழன். தொலைபேசி - 04144 222696

காட்டு மன்னார்குடி
சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே
காட்டு மன்னார்குடியின் தனிச்சிறப்பு.

பாடலீஸ்வரர் கோயில்
பாடல் பெற்ற ஸ்தலம். கடலூரின் மையத்தில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு அருகே இக்கோயில் உள்ளது. இதன் தல விருட்சம் பாதிரிமரம். ஊரின் பழைய பெயர் புலியூர். இரண்டும் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசர், ஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். இக்கோயிலுக்கு அருகே புகழ்பெற்ற பிடாரிஅம்மன் கோயிலும் அமைந்துள்ளது. தொலைபேசி - 04142-236728.

நெய்வேலி
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி போலவே முந்திரியும் விளைகிறது. இந்தியாவிலேயே அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்குதான் வெட்டியெடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு நெய்வேலி மின்சாரம் மூலம் வெளிச்சமும் தருகிறது. உரமும் தயாரிக்கப்படுகிறது. கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நெய்வேலி அமைந்துள்ளது.

பிச்சாவரம்
நீரில் மிதந்தபடி சுரபுன்னைக் காடுகளைப் பார்ப்பது அழகு. நிலத்திற்குள் கடல் வந்து முத்தமிடும் கழிமுகம் இது. இங்கு 11000 ஏக்கர் பரப்பளவில் சுரபுன்னைக் காடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இங்கு பல வகையான மீன்களை உண்டு மகிழலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், அழகிய குடில்கள், உணவு விடுதி, படகுப் பயணம் என்று பிச்சாவரத்தை மிச்சமின்றி ரசித்து மகிழ பல வசதிகள் உள்ளன. தொலைபேசி - 04144-249232.

கடலூர் துறைமுகம்
கடலூர் துறைமுகம் தனிச் சிறப்புமிக்கது. சரக்குப் படகுகள் வரப்போக கப்பல் நிறுத்துவதற்கு வசதியான துறைமுகம் இது. தென்னக ரயில்வேயின் பிரதான தடங்களில் ஒன்றான கடலூர் ரயில் நிலையத்தோடு இப்பகுதி சரக்குப் போக்குவரத்தின் காரணமாக இணைக்கப்பட்டுள்ளது. உப்பனாற்றின் மேற்குப் பக்கம் புதிய துறைமுக அலுவலகத்திற்கு அருகே சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல் துறை மேடையொன்று 200 மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தின் பரப்பளவு 1132.4 மீட்டர். இதன் ஆழம் 15 முதல் 18 மீட்டர்.

பரங்கிப்பேட்டை
இங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள். மாலுமியார் அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.

ஸ்ரீமுஷ்ணம்
சுயம்பு வடிவில் உள்ள எட்டு திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவராகசாமி கோயில் இங்குள்ளது. ரதம் போன்ற வடிவிலான புருஷhஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்நகர் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

திருவகிந்தபுரம்
வைணவ தேசங்கள் 108இல் நடுநாட்டுத் திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கடலூர் நகரையொட்டிய ஓர் அமைதியான கிராமம். இலங்கை போர்க் களத்திற்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைக் கையில் ஏந்திச் சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு துளியே தேவநாதப் பெருமாளாக எழுந்தருளியதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் போற்றி வணங்கும் புனிதத்தலம்.

வடலூர்
வடலூர் என்றதும் வள்ளலார் ஞாபகத்திற்கு வருவார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய ராமலிங்க சுவாமிகள் சத்யஞான சபையை நிறுவிய இடம் இது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்லும் இடமாகவும் இருக்கிறது. நெய்வேலியிலிருந்து மிக அருகில் கங்கை கொண்டான் பேரூராட்சிக்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்நகரம் கடலூரிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது.

தில்லை காளி கோயில்
மிகப் பழமையான கோயில் கடலூர் நகரின் வட திசை எல்லையில் இது அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் ஆண்ட கப்பேருஞ்சன் என்ற மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. பக்தர்கள் நாடும் நற்கோயில். தொலைபேசி - 04144-230251.

பஞ்ச சபைக் கோயில்கள்
சிவபெருமான் தன் பிரபஞ்ச நடனத்தை திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் (சிற்சபை) சிதம்பரத்தில் உள்ள பொற்சபையிலும் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும் திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையிலும் குற்றாலத்தில் உள்ள சித்திர சபையிலும் ஆடினார். இச்சபைகள் உள்ள கோயில்களே பஞ்ச சபைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

விருத்தாச்சலம்
மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்த நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. மாசிமகத் திருவிழாவில் யாத்ரிகர்கள் மணிமுத்தாறு நதியில் புனித நீராடுவர். கடலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி
நடனக்கலையின் தலைவன் நடராஜன். அவன் ஆடும் நாட்டியம் பிரபஞ்ச இயக்கம். இதன் அடிப்படையில் நடராஜபெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் விழா இது. இந்த விழா மகா சிவராத்திரி ஐந்து நாட்களும் நடைபெறுகிறது. பல நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தின் மூலம் நடனக் கடவுளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

பஞ்சபூதத் தலங்கள்
சிவபெருமானின் ஐந்து பண்பு நலன்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களே பஞ்சபூதத் தலங்கள் எனப் புனிதமாகக் கருதி மக்கள் வழிபடுகிறார்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகியவையே பஞ்சபூதத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

No comments: