Wednesday, November 20, 2013

கோயம்புத்தூர்

altகோவை குற்றாலம்:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுவாணி மலை அடிவாரத்தில் அருவியாக கொட்டுகிறது. பச்சை பசேல் என்ற மரங்களின் நடுவே குளிர்ந்த நீராக கொட்டும் இதை கோவை குற்றாலம் என அழைக்கின்றனர். இந்த இடம் கோவை நகரில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் உள்ளது.
 

வைதேகி நீர்வீழ்ச்சி:
கோவை குற்றாலம் போன்றே இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட இந்த இடத்தில்
"வைதேகி காத்திருந்தாள்' படம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு இதை வைதேகி நீர்வீழ்ச்சி என அழைக்க துவங்கிவிட்டனர்.

சிறுவாணி அணை:
கோவை நகர மக்களுக்காக நரசிம்மலு நாயுடு என்பவர் 1889ம் ஆண்டு சிறுவாணி திட்டத்தை அளித்தார். பின்னர் 1922ம் ஆண்டு பரிசீலிக்கப்பட்டு 1930 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. கோவை நகர மக்களின் முக்கிய குடிநீர் தேவையை சிறுவாணி நீர்தான் தீர்த்து வைக்கிறது. உலகில் இரண்டாவது மிக சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்படுகிறது. வனத்துறையின் அனுமதி பெற்று இந்த அணைக்கு செல்லலாம்.

விவசாய பல்கலை கழகம்:
1907ம் ஆண்டு விவசாய ஆராய்ச்சிக்காக கோவையில் மையம் துவங்கப்பட்டது. பின்னர் விவசாய கல்லூரியாகவும், இன்று தமிழ்நாடு விவசாய பல்கலை கழகமாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான வேளாண் ஆராய்ச்சியாளர்கள் இங்கிருந்து உருவாகியுள்ளனர்.

மணிக் கூண்டு:
கோவை நகரில் பரபரப்பு மிகுந்த டவுன்ஹாலில் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மணிக் கூண்டு கட்டப்பட்டது. இதை கட்டியவர் திருவேங்கடசாமி முதலியார். இதன் அருகே இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணியின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், விக்டோரியா ஹாலும் கட்டப்பட்டது. இவை இரண்டும் கோவை நகரின் கலைச்சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.
மருதமலை:
கோவைக்கு வடமேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து 599 அடி உயரத்தில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில் மிக பிரசித்தி பெற்றது.

No comments: