சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார். மேலும், ‘கோப்லி விருது’, அறிவியலுக்கான ‘தேசிய விருது’ எனப் பல தேசிய விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், ஏராளமான அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். உலக அளவில் குறிப்பிடத்தக்க வானவியல் இயற்பியலாளர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சந்திரசேகரின்
வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் மேற்கொண்ட சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 19, 1910
இடம்: லாகூர், பஞ்சாப் மாநிலம், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில்)
பணி: வானியல் இயற்பியலாளர்
இறப்பு: ஆகஸ்ட் 21, 1995
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1910 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சி. சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். இவருடன் ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, சுந்தரி என ஆறு சகோதரிகளும் விசுவநாதன், பாலகிருஷ்ணன், ராமநாதன் என மூன்று சகோதரர்களும் பிறந்தனர். இவர் சி. வி. ராமனுடைய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
ஆராய்ச்சியின் முதற்படி
1928 ஆம் ஆண்டு “ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட்” இந்தியா வந்திருந்த பொழுது, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், அவரை சந்தித்து, இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளை பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும், அவைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் கவனமும் செலுத்தினார். பிறகு அடுத்த ஆண்டே தன்னுடைய ஆராய்ச்சியின் முதல் கட்டுரையை பதிப்பித்த அவர், மேலும் இரண்டு கட்டுரைகளை அதற்கடுத்த ஆண்டு வெளியிட்டார். தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இந்திய அரசின் நன்மதிப்பைப் பெற்ற அவர், 1930 ஆம் ஆண்டு மத்திய அரசின் பரிசும், பணவுதவியும் பெற்று மேல்படிப்பிற்காக பிரிட்டன் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பயின்றார்.
சுப்பிரமணியன் சந்திரசேகரின் ஆராய்ச்சிப் பணிகள்
பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக இவருக்கு இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இல்லற வாழ்க்கை
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார்.
விருதுகளும், மரியாதைகளும்
- 1944 – லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினர்.
- 1952ல் ‘ப்ரூஸ் பதக்கம்’.
- அமெரிக்க அறிவியல் கழகத்தின் ‘ஃபோர்டு பதக்கம்’.
- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘ஆதம் பரிசு’.
- 1953 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ராயல் வானியல் கழகத்தின் மூலம் ‘தங்கப்பதக்கம்’.
- 1967 ஆம் ஆண்டு ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் மூலம் ‘தேசிய அறிவியல் விருது’.
- 1971ல் ‘ஹென்றி டிராபர் பதக்கம்’.
- இந்திய அரசு வழங்கிய “பத்ம விபூஷன்”
- 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’.
- 1984ல் ராயல் சொசைட்டியின் மிக உயர்ந்த மரியாதையான காப்லே பதக்கம்.
இறப்பு:
ஒரு ஆராய்ச்சியாளராக மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் வாழ்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் நாள் இருதய பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.
No comments:
Post a Comment