செஞ்சிக்கோட்டைக்கு தனித்த வரலாறு உண்டு. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது செஞ்சி. ஆனந்தக்கோனாரால் அமைக்கப்பட்டது. சோழர்களால் சிங்கப்புரநாடு என்றும், முகலாயர்கள் பாதுஷாபாத் என்றும் செஞ்சியை பெயரிட்டு ஆட்சியாண்டனர்.
செஞ்சிக்கோட்டையை 13 ஆம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட தொடங்கினர். கோட்டை கொத்தளங்கள் கட்டப்படுவதற்க்கு முன் இந்த மலைப்பகுதி சுமார் 10 நூற்றாண்டுகளாக ஜெய்ன துறவிகள் வசமிருந்துள்ளது. கி.பி 6 ஆம் நூற்றாண்றில் பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் இங்கு கோயில்கள் கட்ட தொடங்கினர். பின் பிற்கால சோழர்கள் காலத்தில் இப்பகுதி அவர்கள் வசமிருந்துள்ளது, அவர்களுக்கு பின் பாண்டியர்கள் வசமும்
இருந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் இங்கு கோட்டைகள் கட்ட தொடங்கப்பட்டன. 1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரையிலான விஜயநகர அரசர்கள் இதனை விரிவுப்படுத்தி பலம் பொருந்தியதாக அமைத்தனர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது செஞ்சி தான் அதன் தலைநகராக விளங்கியது.
மராட்டிய மாமன்னன் சிவாஜி ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோட்டையை பிஜப்பூர் சுல்தான் படைகள் தங்கள் வசம் கொண்டுவந்தனர். இந்த கோட்டை, யாரும் எளிதில் நுழைய முடியாத பலமான கோட்டை. ஆகவே அது நம் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என மீண்டும் சிவாஜி படை திரட்டி இக்கோட்டையை தன் வசமாக்கினார்.
செஞ்சிக்கோட்டையை கிருஷ்ணகிரிமலை, சக்கிலிதுர்க்கம், ராஜகிரி என பெயர் கூட்டப்பட்ட மூன்று மலைகளும் இந்த கோட்டைக்கு பாதுகாப்பாக உள்ளன. மேலும் அதன் அருகே இரண்டு குன்றுகளும் உள்ளது. இந்த மலைகள் நீண்ட சுவறால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ராஜாவுக்கு என்று தனி கோட்டையும், கிருஷ்ணகிரி மலையில் இராணிக்கென்று தனி கோட்டையும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை சுற்றி அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
செஞ்சிக்கோட்டையை கடைசியாக தேசிங்குராஜா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனைப்பற்றியும். ஆட்சியைப்பற்றியும், அவன் வீரத்தைப்பற்றி வாய்வழி பாடல்களாக பல கதைகள் இங்கு உண்டு.
ராஜாதேசிங்கு:-
மராட்டிய மன்னன் சிவாஜி டெல்லி சுல்தானான அவுரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை தன் வசம்மாக்க படை எடுத்து பல பகுதிகளை பிடித்து வந்தார். ஆந்திரா, கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தது சிவாஜியின் படை. சிவாஜி இறந்தபின் அவரது மகன் ராஜாராம் அதே பணியை செய்தார். ஆனால் அவுரங்கசீப்பின் படை முன் ராஜாராம் படைகள் தோற்றன. இதனால் ராஜாராம் அங்கிருந்து தப்பி செஞ்சிக்கோட்டைக்குள் பதுங்கினார். ராஜாராம்மை கைது செய் அல்லது கென்றுவிட்டு வா என தன் படை தளபதிகளுள் ஒருவரான முகமூத்கான் என்பவர் தலைமையில் படையை அனுப்பினார். அந்த படை செஞ்சியை முற்றுகையிட்டது. 11 மாத முற்றுகையில் குதிரைப்படை தளபதியாக இருந்த சொரூப்சிங் என்பவர் கோட்டையின் முற்றுகையை உடைத்தார். இதனால் அவுரங்கசீப்பின் படை வெற்றி பெற்றது. ஆனால் ராஜாராம் அங்கிருந்து தப்பினார். போரில் வீரத்துடன் போரிட்டதால் இப்பகுதியை ஆளும்பொறுப்பை அவுரங்கசீப் சொரூப்சிங்கிடம் ஒப்படைத்தார். சொரூப்சிங் அவரது மனைவி ராமாபாய்க்கு மகனாக பிறந்தவன் தான் ராஜாதேசிங்கு.
டெல்லியில் அவுரங்கசீப் இறக்க அவரது மகன் ஆலம்ஷா டெல்லி சுல்தானாக பதவியேற்றார். ஒருமுறை ஆலம்ஷா வாங்கிய பரிகாரி என்ற முரட்டு குதிரை தன் மேல் யாரும் ஏற முடியாதபடி முரண்டு பண்ணியது. இதனால் எந்த குதிரையையும் அடக்கும் வல்லமை கொண்ட சொரூப்சிங்கை செஞ்சியில் இருந்து டெல்லி வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்படி சொரூப்சிங் தன் மகன் தேசிங்குடன் டெல்லி சென்றார். அக்குதிரை சொரூப்சிங்கால் அடக்க முடியவில்லை. ஆனால் தேசிங்கு அக்குதிரையை அடங்கினார். இதில் சந்தோஷமான ஆலம்ஷா அவனது வீரத்தை பாரட்டும் விதமாக அக்குதிரையை தேசிங்க்கு பரிசாக வழங்கினார். மற்றொரு தளபதி தன் மகளான இராணிபாய்யை தேசிங்க்கு மணமுடித்து வைத்தார்.
தன் மனைவி நினைவாக தேசிங்கு இராணிப்பேட்டை என்ற கிராமத்தை உருவாக்கினார். அரங்கன் என்ற கடவுளே அவனின் குல தெய்வமாகும். அது செஞ்சிகோட்டை அமைந்துள்ள பகுதியில் இருந்து 2 பர்லாங்க் தொலைவில் உள்ள சிங்கவரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு இராணிபாய் போய்வர ரகசிய பாதை அமைத்துள்ளார். இராஜாதேசிங், எந்த முக்கிய பணி செய்தாலும் அரங்கனிடம் அனுமதி பெற்றே செய்வார். சொரூப்சிங்க்கு பிறகு இராஜாதேசிங் பதவிக்கு வந்தார். அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் படை தளபதி இஸ்லாமியரான முகம்மதுகான். அதேபோல் தனது குதிரை நீலவேணி மீதும் அதிக ஈடுபாடு கொண்டவன் இராஜாதேசிங்.
ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்தான். அப்போது இராஜாதேசிங் அரங்கனிடம் சென்று அனுமதி கேட்டபோது, இன்று போகாதே என்றதாம். ஆனால் தேசிங், எதிரி வந்துவிட்டான் இனி திரும்பமுடியாது என்றபோது அரங்கன் முகத்தை திருப்பிக்கொண்டது. இன்றளவும் அச்சாமியின் முகம் திருப்பி கொண்டதாகவே காணப்படும். தேசிங் தோல்வியை தழுவி மாண்டான். அவனது குதிரை, தளபதியும் அப்போரில் மாண்டனர். செஞ்சி ஆற்காடு நவாப்பின் கீழ் வந்தது. அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. இதன் பாதுகாப்பு, நேர்த்தியை கண்ட ஆங்கிலேயர்கள் 1921 ஆம் ஆண்டு செஞ்சிக்கோட்டையை தேசிய நினைவு சின்னமாக அறிவித்தனர். அதன்படி இது தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
கோட்டைக்குள் பார்க்க வேண்டிய இடங்கள்:-
போர்வீரர் தங்குமிடங்கள் குதிரைலாயங்கள்
உயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள்,குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்குஅருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம்அமைக்ப்பட்டுள்ளது.
யானைக்குளம்
போர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின்ரகசியங்கள்.
சதத் உல்லாக்கான் மசூதி
சதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக்கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 - 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சியகல்வெட்டு தெரிவிக்கிறது.
நெற்களஞ்சியம் - உடற்பயிற்சிக்கூடம்
விஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகுகட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம்பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர். பீப்பாய்போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும்.உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாக சொல்லப்படுகிறது.
வெங்கட்ரமணா கோயில்
பரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும்நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
வேணு கோபாலஸ்வாமி கோயில்
கலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது,அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்புவாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது.இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.
ராஜகிரி மலைகோட்டை
ராஜகிரி மலைகோட்டை
இந்தோ - இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில்உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்றுஇம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக்கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர்கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்டபெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.
கிருஷ்ணகிரி கோட்டை
கிருஷ்ணகிரி கோட்டை
ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்குகாண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக்கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை,வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன.
சிவன் கோயில்
வழித்தடம் :
திருவண்ணாமலையில் இருந்து 35கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 160கி.மீ தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து 20கி.மீ தொலைவிலும் உள்ளது. சென்னையில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து செல்கின்றன. தொடர்வண்டியில் வருபவர்கள் திண்டிவனத்தில் இறங்கி பேருந்தில் செஞ்சிக்கு செல்லலாம். இங்கு தங்க ஏராளமான வசதிக்கு ஏற்றாற்போல் விடுதிகள் உள்ளன. தரமான உணவு விடுதிகளும் இங்குண்டு.
No comments:
Post a Comment