விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின்
வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜூலை 1, 1961
இடம்: கர்னல், ஹரியானா (இந்தியா)
பணி: அறிவியலாளர்
இறப்பு: பிப்ரவரி 1, 2003
பிறப்பு:
கல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
கல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விண்வெளி பயணம்:
1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.
கொலம்பியா விண்கல நிகழ்வு:
முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.
விருதுகளும் அங்கீகாரங்களும்:
- நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு “கல்பனா வே” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
- நாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அற்பணித்துள்ளது.
- காங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர் விருது.
- நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்
- நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்
- டிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்
இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காலவரிசை:
1961 – ஜூலை 1, கர்னல் என்ற ஊரில் பிறந்தார்.
1982 – மேற்படிப்பிற்காக அமெரிக்கா பயணம்.
1983 – ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணமுடித்தார்
1984 – அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.
1988 – விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும், நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
1995 – நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார்
1996 – கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.
1997 – கல்பனாவின் முதல் விண்வெளி பயணம் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல்” பயணம் செய்தார்.
2000 – கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2003 – கொலம்பியா விண்கலம் STS-107 அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
No comments:
Post a Comment