Tuesday, December 24, 2013

டாக்டர். ராஜேந்திர பிரசாத்


rajendra-prasad
இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்ட ‘குடியரசு தலைவர்’ பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ ஆவார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசு தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரராகவும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுக்களில் ஒருவராகவும் பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை
விரிவாக காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 03, 1884
இடம்: செராடெ (சிவான் மாவட்டம்) பீகார் மாநிலம், இந்தியா
பணி: குடியரசு தலைவர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: பிப்ரவரி 28,  1963
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
இந்திய விடுதலை போராட்ட வீரரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 03  ஆம் நாள் இந்தியாவின் பீகார் மாநிலதில் சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகிக்கும், கமலேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை பெர்சியா மொழி மற்றும் சமஸ்கிருத மொழியில் சிறப்புப்பெற்றவராகவும், இவருடைய தாய் சமயப் பற்றுடையவராகவும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், தனது ஐந்தாவது வயதில் ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் பெர்சியம், இந்தி, மற்றும் கணிதம் கற்கத் தொடங்கினார். பிறகு, சாப்ரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.
1907 ஆம் ஆண்டு, “கொல்கத்தா பிரிசிடன்சி கல்லூரியில்” பொருளியல் துறையில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், எம்.ஏ முதுகலை பட்டபடிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். பின்னர், சட்டக் கல்விப் பயின்று, முதல் மாணவனாகத் தேர்ச்சிப்பெற்று தங்கப் பதக்கத்தையும் வென்ற அவர், சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விடுதலைப் போராட்டத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பங்கு
1911 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916 ஆம் ஆண்டு பாட்னாவிற்கு இடம்பெயர்ந்து, பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்த அவர், தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.
முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்
“வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கைது செய்யப்பட்டு, ஜூன் 15, 1945  ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்,  1946 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடாக மாறியது. 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1964 வரை, இரண்டு ஆண்டுகள் குடியரசு தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில் அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றார்.
இறப்பு
1962 ஆம் ஆண்டு தன்னுடைய குடியரசு தலைவர் பதவியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார். இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை மே 13, 1962 ஆம் ஆண்டில்  வழங்கி கெளரவித்தது.

No comments: