மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள்.
இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு
குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரைகிலோவுக்கும் அதிகமாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதுடன் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் இந்த காய்கறி மற்றும் பழங்கள் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரைகிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
இவர்களின் கருத்துப்படி, நாளாந்தம் சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல்வேறு வகையான காய்கறிகளையும் பழங்களையும் கலந்து சாப்பிடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அதன்மூலமே மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் மனித உடலுக்கு கிடைக்கும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறியாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த வெளிநாட்டு ஆப்பிள் பழங்களாகவோதான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற விலைகுறைந்த காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவற்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற விலை சகாயமாக கிடைக்கும் பழங்களிலும் கூட நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம் என்கிறது இந்த ஆய்வறிக்கை. சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்த ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment