Saturday, March 23, 2013


முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு



          யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும் என மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி., அறிவித்திருந்ததற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த கடுமையாக எதிர்ப்பை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
          திருத்தங்களுக்கு எதிர்ப்பு :சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும் எனவும், இலக்கியம் தொடர்பான தேர்வுகள் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுத வேண்டும் எனவும் யூ.பி.எஸ்.சி., தனது தேர்வு விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்தது. இலக்கிய தேர்வுகள், தேர்வாளர்கள் தங்களின் பட்டப்படிப்பின் போது விருப்ப பாடமாக ஆங்கிலத்தை தேர்வு செய்யாதிருந்தாலும் ஆங்கில வழியிலேயே எழுத வேண்டும் என தெரிவித்திருந்தது.புதிய அறிவிப்பு : பல்வேறு தரப்புகளிலும் இருந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்த தனது திருத்தங்களை திரும்பப் பெற்ற யூ.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
 
 
                உயர் சேவை பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய அரசு வேலைகளுக்களுக்கு தகுதி பட்டியலில் தேர்தெடுக்கப்பட்டவர்களின் ஆங்கில தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது; கட்டுரை தேர்வுகளின் அதிகபட்ச மதிப்பெண்கள் 200ல் இருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; முதன்மை தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண் 1750 ஆக ஆக்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 4 தேர்வுகளில் பொது தேர்வு 1000 மதிப்பெண்களுக்கும், 2 விருப்பப்பாட தேர்வுகள் 500 மதிப்பெண்களுக்கும், கட்டுரை தேர்வுகள் 250 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட உள்ளது; ஆங்கில தேர்வுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. திருத்தங்களின் அடிப்படையிலான புதிய விதிமுறைகளை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
 
                      பார்லிமென்டின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி., அறிவித்த புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், புதிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

No comments: