நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!
நேரம் நிர்ணயித்து எழுதிப்பார்க்கும் தேர்வுக்கு முந்தைய மாதிரித் தேர்வுகள், உங்களின் சுய மதிப்பீட்டிற்கு சிறந்த அளவுகோல்களாக திகழ்கின்றன.
ஏனெனில், போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை, நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம். எனவே, நேர அடிப்படையிலான மாதிரித் தேர்வுகளே சிறப்பானவை. நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள், சிறப்பாக செயல்படும் வகையில், கல்வியாளர்கள், இலவச ஆன்லைன் தேர்வுகளை உருவாக்கியுள்ளார்கள். இதன்மூலம், ஒரு மாணவருக்கு, நிஜத் தேர்வுகளை எழுதும் உணர்வு கிடைப்பதோடு, அனுபவமும் கிடைக்கிறது.
இத்தகைய ஆன்லைன் நுழைவுத் தேர்வுகளின் மூலம் கிடைக்கும் பயிற்சியால், ஒரு மாணவர், சிறப்பான வகையில் நிஜத் தேர்வுக்கு தயாராகிறார். இத்தகைய இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை, குறிப்பிட்ட தளத்தில் பதிவுசெய்தவுடன் எழுதலாம்.
இத்தகைய மாதிரித் தேர்வுகள், பல வகைகளில் நடத்தப்படுகின்றன. CAT, MAT, XAT, IIT - JEE போன்றவை அவற்றுள் முக்கியமானவை. இவைத்தவிர, மருத்துவம், பாதுகாப்பு, அரசுப் பணிகள் உள்ளிட்ட பலவிதமான துறைசார்ந்த நுழைவுத்தேர்வுகளுக்கும், மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நேர கணிப்பு
நீங்கள் மாதிரி ஆன்லைன் தேர்வை எழுதும்போது, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணிக்க முடிகிறது. இதன்மூலம், எந்த மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க, அதிக நேரம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளலாம்.
தேர்வின் இறுதியில் உங்களுக்கான மதிப்பெண் வழங்கப்படும். இதில் குறைந்த மதிப்பெண்கள் வந்தால் வருந்தக்கூடாது. மாறாக, உங்களின் நிலையை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற ஆன்லைன் தேர்வுகளின் கேள்விகள், முந்தைய தேர்வுகளின் மாதிரியிலேயே கேட்கப்படும். இதன்மூலம், நிஜத் தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகிறது என்பதை உங்களால் யூகிக்கவும் முடியும்.
ஆன்லைன் தேர்வை, நீங்கள் எத்தனைமுறை எழுத விரும்புகிறீர்களோ, அத்தனை முறையும் திரும்ப திரும்ப எழுதலாம். இதன்மூலம், உங்களின் நேர மேலாண்மைத் திறன் மேம்படும். மேலும், இத்தகைய தளங்களில், பலவிதமான ஆலோசனைகளும்(counselling) வழங்கப்படுகின்றன. இவைகளின் மூலம், தேர்வு மாதிரிகளை, எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment