வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?
நிச்சயமாக. அதுதான் எனது வேலையே. வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து வர்றீங்க?
மதுரைலேந்து. பசங்களுக்கெல்லாம் லீவு விட்டதால ஊரைச் சுத்தலாமுன்னு கெளம்பிட்டோம்.
சரி மாமல்லபுரத்தைப் பற்றி தெரிஞ்சுக்குவோம். காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற மாமல்லபுரத்துக்கு மகாபலிபுரமுன்னு இன்னொரு பேரும் இருக்கு. மாமல்லபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்த இடத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லாவின் பெயரைக்கொண்டு பெயர் வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப் படுகிறது. இந்த இடத்துல இருக்கிற பல சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது.
இந்த இடத்துக்கு வேற என்ன சிறப்பெல்லாம் இருக்கு?
இந்த இடத்தை ஐ.நா சபையோட UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிச்சிருக்கு. மேலும் இந்த இடம் தமிழகத்தோட மிக பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும் சிற்பக்கலையையும் பாரம்பரியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வர்ராங்க.
மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க போகலாம் வாங்க.
இவைதான் ஐந்து ரதம். இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் ஆன கோவில்கள் தேர் போல இருப்பதால் இதற்கு ரதம் எனும் பேர் வைக்கப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன்தான் இதை உருவாக்கியவர். இந்த ஐந்து கற்கோவில்களும் பஞ்சபாண்டவ இரதங்கள் என்றும் சொல்லலாம்.
எல்லாமே ஒற்றைக் கற்களால் ஆனவையா?
இதில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று மட்டும் சில கற்களால் இணைத்து செய்யப்பட்டதுள்ளது.
அடுத்து எங்கு செல்லப் போகிறோம்?
வாங்க அர்ச்சுணன் தபசு பற்றி தெரிந்துகொள்ளலாம். பெரிய பாறையில் பல சிற்பங்களை செதுக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அருச்சுணன் தபசு. முப்பது மீட்டர் உயரமும், அறுபது மீட்டர் நீளமும் இருக்கிறது.
நல்லா பாத்தீங்கனா இதுல நாலு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்குது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு எப்படி அர்ச்சுணன் தபசுன்னு பேர் வைத்தார்கள்?
இதில் உள்ள ஒரு சிற்பம் ஒரு மனிதன் தவம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அர்ச்சுணன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்ததால் இதனால் இதற்கு அருச்சுணன் தபசு என அழைக்கிறோம். சில பேர் பகீரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது போல் தோன்றுவதால் இதனை பகீரதன் தபசுன்னு குறிக்கிறார்கள்.
சரி ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு வந்து மற்ற இடங்களை பார்க்கலாம்.
உங்க இஷ்டம். சாப்பிட்டு சீக்கிரம் வந்துடுங்க.
அவர்கள் சாப்பிட்டு வரும் வரை நீங்களும் காத்திருங்கள், மகாபலிபுரத்தைப் பற்றிய அடுத்த பதிவுக்காக.
No comments:
Post a Comment