உடற்பயிற்சி:
- உலகில் வாழும் மக்கள் அனைவரும் எப்போதும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
- நோயின்றி வாழ்ந்தால்தான் வாழ்வை நன்கு சுவைக்க முடியும்.
- நோய் தோன்றிய பின் நோயை குணமாக்க பல வழிகளில் முயல்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து நோய் தோன்றுவதற்கு முன் உடலை வலுவுள்ளதாக வைத்துக் கொண்டால் நோய் அணுகாது.
- இதற்கு உடற்பயிற்சியே இன்றியமையாதது.
- உடற்பயிற்சி செய்ய ஏற்ற காலம் அதிகாலை மற்றும் மாலை ஆகும். ஆனால் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது.
உடற்பயிற்சியின் வகைகள்:
- உள்ளுறுப்புப் பயிற்சிகள்
- வெளியுறுப்புப் பயிற்சிகள்
வெளியுறுப்புப் பயிற்சிகள்:
- மேனாட்டு முறைகள் பெரும்பாலும் வெளியுறுப்புப் பயிற்சிகளே ஆகும்.
- தண்டால், பஸ்கி ஆகிய பயிற்சிகள் வெளியுறுப்புப் பயிற்சிகள் ஆகும்.
- இப்பயிற்சியினால் உடலின் சதைப் பகுதிகள் நன்கு பருத்துக் காணப்படும்.
உள்ளுறுப்புப் பயிற்சிகள்:
- நம் நாட்டில் ஆதிகாலத்திலிருந்தே ”யோகாசனப் பயிற்சிகள்” என்று சொல்லப்படும் உள்ளுறுப்புப் பயிற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
- இப்பயிற்சிகளினால் உடலில் வீண் சதைப்பகுதிகள் வளராமல் காக்கப்படுகின்றன.
- இதனால் உடல் அளவுடன் வளர்ந்து அழகாக தோற்றமளிக்கும்.
- உடலின் உள்ளுறுப்புகளாகிய நுரையீரல், இருதயம், ஜீரண உறுப்புகள் ஆகியவை பலம் பெறுகின்றன.
- உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் இரத்தம் சீராகப் பாய்கிறது.
- இதனால் சுறுசுறுப்பும் தெளிவும் உண்டாகும். மூளைப் பலப்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.
யோகாசனப் பயிற்சிகளைத் தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
- உணவு அருந்தி குறைந்தது ஆறு மணி நேரம் ஆகி இருக்க வேண்டும்.
- காலைக் கடன்களை முடித்த பின்னரே பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
- பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது எந்த நேரத்திலும் வாயினால் சுவாசம் விடக்கூடாது. மூக்கினால் மட்டுமே சுவாசிக்க வேண்டும்.
- காற்றோட்டமான இடத்திலேயே பயிற்சி செய்ய வேண்டும்.
- உடலில் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற உடல் நலக்குறைவின் போது பயிற்சியை தடை செய்ய வேண்டும்.
- ஆனால் குறிப்பிட்ட நோயைப் போக்குவதற்கு அந்நோய் இருக்கும் போதே செய்யலாம்
பத்மாசனம்:
- இவ்வாசனம் ஜீரண சக்தியைப் பெருக்கி நல்ல பசியை உண்டாக்குகிறது.
- தேக ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.
- கீழ்வாயுப் பிடிப்பைக் குணமாக்குகிறது. வாதபித்தங்களை சமநிலையில் வைக்கிறது.
- நரம்புகளைத் தூய்மை செய்து வலுப்படுத்துகின்றது.
செய்யும் முறை:
- முதலில் சமதளத்தில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.
- இரு கால்களையும் முன்புறத்தில் நன்றாக நீட்டி வலதுக் காலை மடக்கி இரு கைகளால் தூக்கி இடது தொடையின் மீதும் இடதுக்காலை மடக்கி வலது தொடையின் மீதும் வைக்க வேண்டும்.
- உடல் நன்கு நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
- இரண்டு கைகளையும் முறையே இரண்டு முழங்கால்களின் மீதும் வைக்க வேண்டும்.
- முழங்கால்களும், தொடைகளும் பூமியில் நன்கு பொருந்தியிருக்க வேண்டும்.
- இதுவே பத்மாசனம் ஆகும்.
புஜங்காசனம்:
- முதுகெலும்பின் ஆரோக்கியமே உடலாரோக்கியம் ஆகும்.
- அவை நம் விருப்பப்படி வளையக் கூடியதாயும், இளமையாயும் இருக்க வேண்டும்.
- அதற்கு இன்றியமையாதது புஜங்காசனமே ஆகும்.
- இவை தொப்பை விழுவதைத் தடுக்கிறது.
- நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தியை ரத்த அணுக்களுக்குக் கொடுக்கிறது.
செய்யும் முறை:
- கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு குப்புறப்படுக்க வேண்டும்.
- இரண்டு கைகளையும் தோள்பட்டை அருகிலும், உள்ளங்கை தரையிலும் படும்படி வைக்க வேண்டும்.
- மெதுவாக தலையை தூக்க வேண்டும். அதன்பிறகு கைகளை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு உடலின் மேற்புறத்தை தூக்க வேண்டும். தொப்புளுக்கு மேலுள்ள பாகங்கள் மட்டுமே நன்கு உயர்த்தப்பட வேண்டும்.
- முதுகெலும்பைப் பின்புறம் நன்கு வளைக்க வேண்டும்.
- இந்நிலை பாம்பு படமெடுத்தது போல் தோற்றமளிக்கும்.
- இந்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் இருந்து மீண்டும் முன் நிலைக்கு வர வேண்டும்.
சலபாசனம்:
- இப்பயிற்சி மலச்சிக்லைக் குணப்படுத்த உதவுகிறது.வயிற்றின் உள்ளுறுப்புகள் அதிக வலுப்பெறுகின்றன.
- முதுகுத் தண்டு, நுரையீரல்ஆகியன பலம் பெறுகின்றன.
செய்யும் முறை:
- முதலில் சமதளத்தில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
- உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு கைகளைப் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
- முகவாயைப் பூமியில் பதித்துக் கால்களை முதுகுப்புறம் தூக்க வேண்டும்.
- உடல் விறைப்பாக இருக்க வேண்டும். இப்பயிற்சி செய்யும்போது முழங்கால்கள் மடங்கக்கூடாது.
- தொப்புளுக்குக் கீழுள்ள பகுதிகளை மட்டும் எவ்வளவு உயரம் தூக்க முடியுமோ அவ்வளவு உயரம் தூக்க வேண்டும்.
- சிறிது நேரம் அந்நிலையிலேயே வைக்க வேண்டும். ஆனால் களைப்படையும் வரைத் தூக்க வேண்டாம்.
- இந்நிலை வெட்டுக்கிளித் தன் பின்புறத்தைத் தூக்கிக் கொண்டிருப்பது போல் காணப்படும்.
- இதனால்தான் இப்பயிற்சிக்கு சலபாசனம் என்ற பெயர் வந்தது.
தனுராசனம்:
- இப்பயிற்சி புஜங்காசனம், சலபாசனங்களின் தொடர்ச்சியே ஆகும்.இவ்விரண்டு பயிற்சிகளினால் உண்டாகும் பலனை தனுராசனம் பயிற்சிக் கொடுக்கிறது.
- அதிகக் கொழுப்பை நீக்கி பருமனைக் குறைப்பது இதன் முக்கியத்துவம் ஆகும்.
- கீழ்வாயு நோய் போன்ற பல நோய்களை நீக்கி நல்ல பசி உண்டாக்கி உடலை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவுகிறது.
செய்யும் முறை:
- சமதளத்தில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
- கால்களைப் பின்புறமாக மேலே தூக்க வேண்டும்.
- கணுக்கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- கால்களைப் பின்னோக்கி ஒரே சீராக உதைத்து இழுக்க வேண்டும்.
- இப்போது உடலின் முன்பகுதி பூமியிலிருந்து மேலெழும்.
- உடலின் பாரம் முழுவதையும் வயிற்றுப் பகுதியே தாங்கும்.
- இந்நிலையில் சிறிது நேரம் இருந்த பிறகு மெதுவாக தளர்த்தி ஓய்வெடுக்க வேண்டும்.
- இவ்வமைப்பு வில்போலக் காணப்படும்.இதனால்தான் இப்பயிற்சிக்கு தனுராசனம் என்ற பெயர் வந்தது.
பஸ்சிமோத்தாசனம்:
- இப்பயிற்சி வயிற்றுப் பகுதியில் உள்ள சதைப் பகுதிகளை நன்கு சுருக்கி இரைப்பைக்கு நல்லப் பயிற்சி அளிக்கிறது.
- இரைப்பை நீரை அதிகப்படுத்துகிறது. அஜீரணத்தைப் போக்கி பசியை உண்டாக்குகிறது.
- மூத்திரக் காய்கள், நுரையீரல், பித்தப்பை ஆகியவைகளை நன்கு வேலை செய்யத் தூண்டுகிறது.
- நீரழிவு, மூலம் முதலிய நோய்களை குணப்படுத்துகிறது.
- நல்லத் தூக்கத்தை அளித்துக் கெட்டக் கனவுகள் வராமல் தடுக்கிறது.
- தொடை, கால்கள் இவற்றின் பின்புற சதைகளுக்கு வலுவூட்டுகின்றன.
செய்யும் முறை:
- முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- தொடைகள், கால்கள் ஆகியவை பூமியில் நன்கு பொருந்தி இருக்க வேண்டும்.
- கைகளை தலைக்கு பின்புறம் நன்றாக நீட்ட வேண்டும். கைகள் காதுகளுடன் ஒட்டியது போல் இருக்க வேண்டும்.
- அவ்வாறே உடலின் மேல்பாகத்தை மெதுவாக உயர்த்த வேண்டும்.
- உட்காரும் நிலை வந்தவுடன் மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
- இடுப்பு, முதுகு, கழுத்து, தலை ஆகியவை செங்குத்தாக இருக்க வேண்டும்.
- அப்படியே முன்புறம் வளைய வேண்டும். கைகள் கால்களின் விரல்களை தொடும் வரை வளைய வேண்டும்.
- முகம் முழங்கால்களில் இடிக்கும் வரை வளைவது நல்லது.
- இந்நிலையில் சில நிமிடம் இருந்த பின் மெதுவாக முன் இருந்த நிலையை அடைய வேண்டும்.
- இப்பயிற்சியை மூன்று அல்லது நான்கு முறைகள் செய்ய வேண்டும்.
மயூராசனம்:
- இப்பயிற்சி மிகவும் சிறந்தது. எத்தகைய வயிற்றுக் கோளாறுகளையும் நீக்க வல்லது.
- இவை வயிற்றுப் பகுதியில் உள்ள சதைப் பகுதிகளை இறுக்கி ஜீரண உறுப்புகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கும் படி செய்கிறது.
- நுரையீரல், பித்தப்பை, இரைப்பை, மூத்திரக் காய்கள் ஆகியவைகளை நன்கு வேலைசெய்யத் தூண்டுகிறது.
செய்யும் முறை:
- முதலில் முழங்காலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
- முழங்கையிலிருந்து இரு கைகளும் சேர்ந்திருக்கும் படி செங்குத்தாக நிறுத்த வேண்டும்.
- விரல்கள் கால் பக்கம் நோக்கி இருக்கும் படி உள்ளங்கையை பூமியில் அழுத்த வேண்டும்.
- மெதுவாக வயிற்றுப் பகுதியை முழங்கைகளின் மேல் தாங்கிக் கொள்ள வேண்டும்.
- கால்களை உயர்த்தி நீட்ட வேண்டும். இப்போது உடல் முழுவதும் முழங்கைகளின் மேல் நிற்கும். தலை முதல் கால் வரை பூமிக்கு இணையாக ஒரே கிடைமட்டமாக இருக்க வேண்டும்.
- இந்நிலையில் ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதுவே மயூராசனம் ஆகும்.
பாத ஹஸ்தாசனம்:
- இப்பயிற்சியால் பஸ்சிமோத்தாசனத்தால் ஏற்படும் பலன்கள் யாவும் உண்டாகும்.
- முதுகுத்தண்டு நன்கு நீண்டு வளையும் தன்மை பெற்று இளமையாகத் தோற்றமளிக்கிறது.
- இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகமாகும். உடல் கனம் குறையும்.
செய்யும் முறை:
- முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் ஒட்டியிருக்கும் படி நன்கு நீட்ட வேண்டும்.
- இருகால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். அப்படியே முன்புறம் மெதுவாகக் குனிய வேண்டும்.
- கைகள் காதுகளை ஒட்டியே இருக்க வேண்டும்.
- மெதுவாகக் கால் விரல்களைத் தொட வேண்டும். இப்பயிற்சி செய்யும் போது முழங்கால் மடங்கக் கூடாது.
- இந்நிலையில் ஐந்து முதல் பத்து நிமிடம் இருக்க வேண்டும். இதுவே பாதஹஸ்தாசனம் ஆகும்.
ஹலாசனம்:
- இப்பயிற்சியால் முதுகுப்புறத்தில் உள்ள சதைப் பகுதிகள் நன்கு இழுத்து விரிக்கப்படுகிறது.
- இச்சதைகளே முதுகுத் தண்டை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவுகிறது.
- தேக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது இதன் முக்கியத்துவம் ஆகும்.
- மேலும் நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களையும் போக்க வல்லது.
செய்யும் முறை:
- முதலில் நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- தொடைகளுக்கு அருகில் உள்ளங்கைகளை பூமியில் தொட்டுக்கொண்டிருக்கும் படி வைக்க வேண்டும்.
- கால்களை வளைக்காமல் மேலே தூக்க வேண்டும்.
- கை பூமியிலேயே பதிந்திருக்க வேண்டும்.
- இடுப்பையும், முதுகையும் மேலே தூக்க வேண்டும்.
- கைகளை எடுக்காமல் கால்களைத் தலையின் பின்புறமாகக் கீழ்நோக்கி நகர்த்த வேண்டும்.
- கால் விரல்கள் தலையின் பின்புறத்தில் தரையில் படும்வரை கீழே நிறுத்த வேண்டும்.
- முழங்கால் வளையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கால்களும், தொடைகளும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்த பிறகு மீண்டும் மெதுவாக முன் நிலைக்கு வர வேண்டும்.
- இப்பயிற்சியின் முடிவுநிலை கலப்பைப் போல் காட்சியளிக்கும்.
- இதனால்தான் இப்பயிற்சிக்கு கலாசனம் என்ற பெயர் வந்தது.
சிராஸாசனம்:
- தலை கீழாகவும் கால் மேலாகவும் நிற்கும் நிலையே சிரஸாசனம் ஆகும்.
- இப்பயிற்சியால் ஏற்படும் பலன்கள் அதிகம்.
- தலைகீழாக நிற்பதால் மூளைக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுகிறது.
- மூளை, கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படுகின்றன.
- நரம்பு மண்டலம் முழுவதும் நன்கு தூண்டப்படுகிறது.
- இப்பயிற்சி களைப்படைந்த நரம்புகளை மீண்டும் வலுவடையச் செய்கிறது.
- உடலில் உள்ள பல நோய்களை நீக்குகிறது. இரத்தத்தை சுத்தம் செய்கிறது. நுரையீரல், மண்ணீரல், சிறுநீர் உறுப்புகள் ஆகியவற்றில் தொற்றும் நோய்களை குணப்படுத்துகிறது.
- மேலும் ஆரம்ப காது கேளாத தன்மை, நீரழிவு, மூலம், பயோரியா, மலச்சிக்கல் முதலியவற்றைப் போக்குகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
- பெண்களும் இதைச் சுலபமாக செய்யலாம். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கருவுற்றிருக்கும் போதும் இப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.
- இப்பயிற்சி செய்வதால் மலட்டுத்தன்மை நீங்கும். ஞாபகசக்தி அதிகமாகும்.
செய்யும் முறை:
- தலையின் நடுப்பகுதியை பூமியில் நன்கு பதியுமாறு வைக்க வேண்டும்.
- இரண்டு கைகளையும் சேர்த்து தலையின் பின்புறம் வைக்க வேண்டும்.
- கால்கள் மடிந்து இருக்க வேண்டும். முழங்கால்கள் பூமியில் தொட்டுக்கொண்டிருக்கலாம்.
- மெதுவாக முதுகுத் தண்டை நிமிர்த்த வேண்டும்.ஓரளவு நேராக நிமிர்ந்த பின் மடங்கிய கால்களை நீட்ட வேண்டும்.
- இப்பயிற்சியை மெதுவாக செய்ய வேண்டும். வேகமாகச் செய்தால் முழுப்பலனும் கிடைக்காது.
- செங்குத்தாக நிற்கப் பழக வேண்டும். தொடக்கத்தில் இந்நிலையில் அரை நிமிடம் இருந்தால் போதும்.
- ஆனால் நன்கு பழகிய பிறகு ஐந்து நிமிடங்கள் நிற்க வேண்டும்.
சர்வாங்காசனம்:
- உடலின் எல்லா உறுப்புகளையுமே தூண்டிப் பலப்படுத்தும் ஆசனம் என்பது இப்பெயரின் பொருள்.
- ஆகவே ஆசனங்களில் இவை முக்கியமானது ஆகும். இப்பயிற்சி தைராய்டு சுரப்பிகளுக்கு அதிக இரத்தம் செல்லுமாறு செய்கிறது. அவைகளை தூண்டி உடலை நன்னிலையில் வைக்கிறது.
- சிலர் தம் தீய பழக்கங்களினால் இளமையை இழக்கின்றார்கள். அவர்கள் இப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் இழந்த இளமையைத் திரும்பப் பெறலாம்.
- மலச்சிக்கல், அபெண்டிஸிடீஸ், குடல் சம்பந்தமான வாத பித்த ரோகங்கள் முதலியவைகளைப் போக்கி, ஜீரண சக்தியை பெருக்கி உடலை நன்னிலையில் வைக்கிறது.
- குஷ்ட நோய்க்கு அருமருந்து சர்வாங்காசனம் ஆகும்.
- இப்பயிற்சி செய்யும்போது பாலைத் தவிர வேறு எதுவும் அருந்தக்கூடாது.
- தைராய்டு சுரப்பிகள் அதிக தைராய்டு ரசத்தைச் சுரந்து நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
- உடனே குணமாக வேண்டுமென்றால் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளி ஆனது தன் உடல் முழுவதும் படுமாறு செய்ய வேண்டும்.
செய்யும் முறை:
- முதலில் நன்கு மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
- மெதுவாக கால்களை மேலே தூக்க வேண்டும். இரண்டு கால்களும் ஒட்டியே இருக்க வேண்டும்.
- உடலின் மேல் பாகத்தை முறையே உயர்த்த வேண்டும். முழங்கைகளைக் கீழே நன்கு ஊன்றியப்படி முதுகுப்புறத்தில் கைகளைக் கொடுத்து உடலை நன்கு தாங்கிக்கொள்ள வேண்டும்.
- கழுத்தின் பின்புறம், தலையின் பின்புறம், தோள்கள் ஆகியவை பூமியில் நன்கு பொருந்தியிருக்க வேண்டும். முகவாயை மார்பில் நன்கு அழுத்தி மார்போடு நன்குபொருந்தும்படி செய்ய வேண்டும்.
- உடலின் மேல்பாகம், இடுப்பு, கால்கள்ஆகியவை செங்குத்தாக இருக்க வேண்டும்.
- இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்த பிறகு மெதுவாக உடலை கீழே இறக்க வேண்டும்.
- ஒரே சமயத்தில் அதிக நேரம் நிற்க முடியாவிட்டால் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.
மத்ஸ்யாசனம்:
- இப்பயிற்சி வயிற்றுச் சதைகளுக்கும், வயிற்றின் உட்புற உறுப்புகளுக்கும் சிறந்ததாகும்.
- இப்பயிற்சி மூளையைத் தெளிவுப்படுத்தி தூண்டும்.
- இப்பயிற்சியால் தைராய்டு சுரப்பிகள், பாரா தைராய்டு சுரப்பிகள் ஆகியவை தேவையான அளவு நல்ல இரத்தத்தைப் பெற்று வேலையை சரியாக செய்கின்றது.
செய்யும் முறை:
- முதலில் பத்மாசனத்தில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.
- அவ்வாறே பின்புறம் சாய்ந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
- பத்மாசனம் என்பது பூமியில் எப்போதும் பொருந்தியிருக்க வேண்டும். கால்களை மேலே தூக்கக்கூடாது.
- பிறகு கைகளை பூமியில் அழுத்திக்கொண்டு உடலின் மேல்பாகத்தையும், தலையையும் தூக்க வேண்டும்.
- தலையின் நடுப்பகுதியை தரையில் வைத்து உடலின் மேல்பாகத்தையும், கழுத்தையும் வெளி்ப்புறமாக நன்கு வளைக்க வேண்டும்.
- கைகளால் கால் விரல்களைப் பிடிக்க வேண்டும். இதுவே மத்ஸ்யாசனம் ஆகும்.
திரிகோணாசனம்:
- இப்பயிற்சியால் முதுகுத்தண்டும் அதனோடு சம்பந்தமான நரம்புகளும் தூண்டப்பட்டு வலுவடைகின்றன.
- நல்ல பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது. உடல் லேசாகிறது.
- கால்களுக்கு பலமும், வளர்ச்சியும் உண்டாகின்றன.
- இடுப்புப் பகுதி சுருங்கி வலிமையும், அழகும் பெறுகிறது. உடலும், முதுகும் நன்கு வளையும் தன்மைப் பெற்று எப்போதும் இளமையுடன் தோற்றமளிக்கிறது.
செய்யும் முறை:
- முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
- அதன் பிறகு இரு கைகளையும் இரு பக்கத்திலும் நீட்ட வேண்டும்.
- கைகளும் தோள்களும் ஒரே நேராக இருக்க வேண்டும். அப்படியே இடப்புறம் வளைய வேண்டும்.
- இடு்ப்பு இடப்புறம் நன்கு வளைய வேண்டும்.இடக்கை இடக்கால் விரல்களைத் தொடும் வரை மெதுவாக இடப்புறம் வளைய வேண்டும்.
- அதன்பின் மெதுவாக முன் நிலையை அடைய வேண்டும்.
- அதைப்போல் வலப்பக்கத்திலும் இப்பயிற்சியை செய்ய வேண்டும்.
- நான்கு, ஐந்து முறைகள் இப்பயிற்சியை செய்ய வேண்டும். இதுவே திரிகோணாசனம் ஆகும்.
சவாசனம்:
- எவ்வளவு களைப்பாய் இருந்தாலும் இவ்வாசனத்தை ஐந்து நிமிடம் செய்தால் போதும் களைப்பு நீங்கி விடும்.
- இப்பயிற்சி செய்வதால் புத்துணர்ச்சயும், அதிக வலிமையும் உண்டாகும்.
- இவை தளர்ந்த நரம்புகளை சீர்படுத்தி சுறுசுறுப்படையச் செய்யும்.
செய்யும் முறை:
- முதலில் சமதளத்தில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
- கால்கள் நேராகவும் கைகள் பக்கவாட்டிலும் இருக்க வேண்டும்.
- உடற்சதைகளை தளர்த்தி ஒரே சீராக மூச்சை விட வேண்டும்.
- கண்களை மூடி கடவுளையே தியானம் செய்ய வேண்டும்.
- கால்விரல்களில் இருந்து கால்கள், தொடைகள், இடுப்பு, மேல்பாகங்கள், கைகள், கழுத்து முதலிய ஒவ்வொரு உறுப்புகளையும் முறையாக தளர்த்த வேண்டும்.
- இப்பயிற்சி செய்வதால் முழு அமைதியும், உடல் பாரம் குறைந்தது போலவும் தோன்றும்.
- இதுவே சவாசனம் எனப்படும்.
பெரும்பாலும் நாம் பார்த்த பயிற்சிகள் யாவும் “உள்ளுறுப்புப் பயிற்சிகளே” ஆகும். உள்ளுறுப்புப் பயிற்சிகள் செய்வதால் உடலின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி உள்ளுறுப்புகளை ஆரோக்கிய நிலையில் வைக்கிறது. வெளியுறுப்புப் பயிற்சிகள் வெளிப்பாகத்தை நன்னிலையில் வைக்கிறது. உள்ளுறுப்புப் பயிற்சிகளையும், வெளியுறுப்புப் பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது. ஆனால் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது எத்தகைய பலனையும் பெறாமல் உடலைக் கெடுத்துக் கொள்வதாகும். எனவே ஆரோக்கிய வாழ்விற்கான பயிற்சிகளை மேற்கொண்டு உலகில் நோயின்றி வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.
No comments:
Post a Comment