சிம்லா, தற்பொழுது பெயர் ஷிம்லா என மாற்றப்பட்டுள்ளது, இமாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு புகழ் பெற்ற கோடை இருப்பிடமும் ஆகும். 1864-ம் ஆண்டு, இந்தியாவின் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கோடைகாலத் தலைநகராக சிம்லா விளங்கியது.
'குன்றுகளின் ராணி' என்று ஆங்கிலேயர்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற ஷிம்லா, ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இமாலய மலைத் தொடரின் வடமேற்குப் பகுதியில், உயரமான மேட்டில் ஷிம்லா அழகான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ளது. தேவதாரு, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், ரோடோடென்ரான், கருவாலி போன்ற அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் போர்வையால் சூழப்பட்ட
இந்த ஷிம்லா நகரம், இதமான கோடை காலத்தையும் பனிமழை பொழியும் குளிர்ச்சியான குளிர்காலத்தையும் வழங்குகிறது.
காலனி ஆதிக்கத்திலிருந்தே தோன்றிய நியோ-கோதிக் மற்றும் டியுடோர்பீதன் கட்டிடக்கலையின் சாயல் கொண்ட பல கட்டிடங்களுக்கு இந்த நகரம் பெயர் பெற்றது. கால்கா-ஷிம்லா ரயில்வே என்னும் மிக நீண்ட தூர குறுகிய ரயில் பாதை கால்கா நகருடன் ஷிம்லாவை இன்றும் இணைக்கிறது. மிக அண்மையிலுள்ள பெரிய நகரமான சண்டிகரிலிருந்து ஷிம்லா சுமார் 115 கி.மீட்டர் (71.4 மைல்) தூரத்திலும், இந்தியத் தலைநகரமான புதிய தில்லியிலிருந்து சுமார் 365 கி.மீட்டர் (226.8 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து கடவுள் காளியின் மறு அவதாரமாகக் கருதப்படும் சியாமளா தேவி அன்னையை போற்றும் வகையில், இந்நகருக்கு ஷிம்லா என்று பெயர் வந்தது.
ஷிம்லா நகரின் பிரதான கடைத்தெரு மால். உணவகங்கள், மனமகிழ் மன்றங்கள், வங்கிகள், மதுபானக் கடைகள், தபால் நிலையங்கள், சுற்றுலா அலுவலகங்கள் ஆகியவன அனைத்தும் அங்குள்ளன. கெய்ட்டி திரையரங்கும் இங்குதான் உள்ளது. இந்த இடம் அனைத்து மக்களும் கூடும் முக்கியமான இடமாதலால், மக்கள் இத்தெருவில் மெதுவாக மேலும், கீழும் நடமாடிக் கொண்டும் இடையில் நின்று யாருடனாவது வம்பு பேசிக்கொண்டும் இருப்பார்கள். ரிட்ஜ் மற்றும் ஸ்கேண்டல் பாயிண்ட் இரண்டும் மாலில், முக்கியமான ஒன்று கூடும் இடங்கள்.
கிறைஸ்ட் சர்ச் : ஷிம்லாவின் ரிட்ஜ் என்ற மலை யுச்சி முகட்டில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ ஆலயம் வட இந்தியாவின் இரண்டாவது மிகத் தொன்மையான ஆலயமாகும். இது ஒரு கம்பீரமான வெளித் தோற்றம் உடையது. உட்புறத்தில் வண்ணமிகு கண்ணாடி ஜன்னல்களின், அழகும் கண்ணைக் கவரும். இந்த கண்ணாடி ஜன்னல்கள் இறைவன் மேலுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, அருளிரக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, தன்னடக்கம் போன்ற குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றன. இங்கு வரும் அனைவரும் இந்த கிறிஸ்து தேவாலயத்தில் சிறுது நேரம் செலவிட வேண்டும்.
ஜக்கு மலை : ஷிம்லா நகரிலிருந்து 2 கீ.மீ. தூரத்திலுள்ளதும், 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளதுமான மிக உயர்ந்த சிகரமான இந்த ஜக்கு மலையுச்சியிலிருந்து, ஷிம்லா நகரின் அற்புதமான அழகையும் பனிக்கட்டிகள் மூடிய இமயமலைத் தொடர்களையும் காணலாம். இந்த மலை உச்சியில், ஒரு பழமையான அனுமான் கோவில் உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் போடும் தின்பண்டங்களால் பசியாறக் காத்திருக்கும் குறும்புத்தனம் மிக்க எண்ணற்ற குரங்குகளுக்கு இக்கோவில் இருப்பிடமாகும்.
ஷிம்லா அரசு அருங்காட்சியகம் : 1974-ல் துவங்கிய இந்த அருங்காட்சியகம், இந்த மலை மற்றும் மலை சார்ந்த இயற்கை வளங்களையும், கலாச்சார செல்வத்தையும் பாதுகாக்கிறது. மிகச் சிறிய அளவில் வரையப்பட்ட பஹாரி ஓவிங்கள், சிற்பங்கள், வெண்கல மற்றும் மர வேலைப்பாடுகளும் இந்த மாநிலத்திற்குரிய அழகு சாதனப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஆகியன இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்திய உயர்கல்விக் கலாசாலை 1884-88 ல் வைஸ் ரீகல் லாட்ஜில், இந்நிறுவனம் துவங்கியது..
கோடை மலை : மலையுச்சி முகட்டிலிருந்து (ரிட்ஜ்) சுமார் 5 கி.மீ. தொலைவில், சுமார் 6,500 அடி உயரத்தில், ஷிம்லா-கால்கா ரயில்பாதையில் அழகான கோடை மலைக் குடியிருப்பு அமைந்துள்ளது. மகாத்மா காந்தியடிகள் சிம்லாவுக்குச் சென்றபோதெல்லாம், இந்த அமைதியான சூழலில் தான் வசித்து வந்தார். இமாசலப் பிரதேசத்தின் பல்கலைக் கழகம் இங்குதான் உள்ளது.
அண்ணான்டேல் : ரிட்ஜிலிருந்து சுமார் 2–4 கி.மீ. தூரத்திலுள்ள அண்ணான்டேல் ஒரு சிறப்பான விளையாட்டு மைதானமாக 6,117 அடி உயரத்தில் உருவெடுத்துள்ளது. கிரிக்கெட், பிக்னிக், போலோ போன்றவற்றுக்கு மிகவும் விரும்பப்படுகின்ற இடம்.
தாரா தேவி : ஷிம்லா பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ளது. தாரா தேவி மலையின் உச்சியில் நட்சத்திர தேவதைகளுக்காக அர்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. இராணுவ பால்பண்ணை நகரும், அகில இந்திய சாரணர் இயக்கத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளன.
சங்கட் மோச்சன் : ஒரு அனுமன் கோவில் இங்குள்ளது.
ஜுங்கா : ஷிம்லாவிலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ஜுங்கா, ஒரு தாலுக்காவாகும். இதன் பழங்காலப் பெயர் ஜுங்கா . கியோன்தால் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட, ஜுங்கா என்ற மாநிலத்தின் அரசகுடும்பம் தனிமையில் ஓய்வெடுக்கும் இடமாக இது இருந்துள்ளது.
மஷோப்ரா : ஷிம்லாவிலிருந்து 13 கி.மீ. தூரத்திலுள்ள இவ்விடத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் சிப்பி என்னும் விழா கொண்டாடப்படுகிறது.
குஃப்ரி, ஷிம்லாவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் 8,600 அடி உயர சிகரத்தில் குளிர்கால விளையாட்டுத் தலை நகரமாகவுள்ள குஃப்ரியில் சிறு மிருகக் காட்சி சாலையும் உள்ளது.
சாரப்ரா : குஃப்ரிக்குச் செல்லும் வழியில் ஷிம்லாவிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
நல்தேரா : ஷிம்லாவிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஒன்பது துளை நல்தேரா கோல்ப் கிளப் இங்குதான் உள்ளது. ஆண்டுதோறும் ஜுன் மாதத்தில் நல்தேராவில்தான் சிப்பி திருவிழா நடைபெறும்.
ததாபானி : ததாபானி புனிதக் கோவிலருகே கந்தக வெந்நீர் ஊற்று இருக்கிறது.
செயில் : இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், பாட்டியாலா மகா ராசாவிற்குச் சொந்தமான இப்பகுதி கோடைக்கால, தலை நகரமாயிருந்தது. உலகிலேயே அதிக உயரத்திலுள்ள கிரிக்கெட் ஆடுகளம் இங்குதான் உள்ளது.
ஆர்க்கி : அந்நாளைய பாகல் என்ற மலை நாட்டின் தலைநகரமாக இருந்தபோது கட்டிய, 18 ம் நூற்றாண்டின் பழமையான கோட்டையும் இங்குள்ளது.
சஞ்சாவுலி : ஷிம்லா நகரின் முக்கியமான புறநகரமாகும். |
No comments:
Post a Comment