இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அழகான சுற்றுலாத் தலம்தான் மணாலியாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
இமயமலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் மணாலி அமைந்துள்ளது. பீஸ் நதிக்கரையில் இந்த சிறிய புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்
அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாகும்.
மணாலியைச் சுற்றி அடர்ந்த பைன், செஸ்ட்நட், டியோடர் மரக் காடுகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இதில் மற்றுமொரு விஷயமும் இருக்கிறது. அதாவது 6,600 மீட்டருக்கு மேல் உயர்ந்த, பனி படர்ந்த சிகரங்களும் அமைந்திருப்பது கண்ணிற்கும் விருந்தாகிறது. மணாலி, குலு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் மக்கள்தொகை சுமார் 30,000. சப்தரிஷிகள் அல்லது ஏழு துறவிகளின் தாயகமாக மணாலி கூறப்படுவதால், மணாலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் மிக உயர்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
மணாலி அமைந்துள்ள குலு பள்ளத்தாக்குப் பகுதியின் எல்லா இடங்களையும் போல இங்கும் ஆப்பிள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. சாலையோரங்களில் கூட ஆப்பிள் மரங்கள் காட்சியளிக்கின்றன.
சாதாரணமாக சுற்றிப்பார்க்கும் சுற்றுலாப் பயணிகளை விட, இயற்கையை அதிகம் நேசிப்பவர்களுக்கும், சாகசம் புரிய ஆவல் இருப்பவர்களுக்கும் மணாலி ஒரு சொர்க்கபுரியாகும்.
குறிப்பாக இப்பகுதிக்கு வர வேண்டும் என்றால் நல்ல உடல் ஆரோக்கியம் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இங்கு அடர்ந்த காட்டுக்குள் நடைப் பயணமாக சென்று காட்டினை ரசிக்கும் வசதியும் உண்டு. மலை ஏறலாம், மலைப் பாதையில் வாகனம் ஓட்டலாம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், நதியில் படகு செலுத்துவது போன்ற சாகசங்கள் புரிய ஏற்ற இடமாக மணாலி இருக்கிறது.
மலை ஏற்றம் குறித்து பயிற்சி பெற விரும்பினாலும், இங்குள்ள மலையேற்றக் கல்வி நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெறலாம்.
இந்த மணாலி நகரத்திற்கு பெயர் காரணம் கூறப்படுகிறது. பிராமண சாஸ்திர உருவாக்குனரான மனுவின் பேரில் மணாலி என்ற பெயர் இடப்பட்டிருக்கிறது. மணாலி என்னும் வார்த்தையின் பொருள் “மனுவின் இருப்பிடம்” என்பதாகும். உலகத்தை பெருவெள்ளம் மூழ்கடித்த போது மனித வாழ்க்கையை மீண்டும் படைப்பதற்காக மணாலியில் தனது படகில் இருந்து துறவியான மனு இறங்கி வந்ததாக புராணக் கதை கூறுகிறது. மணாலி "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படுகிறது.அவரது நினைவாக மணாலியின் பழைய நகர்ப்பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் மனால்சு நதிக்கரையில் மனுவுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
மணாலியில் பல்வேறு வகையான கோயில்கள் அமைந்துள்ளன. அதாவது மனுவின் கோயில் உள்ளது. மேலும், பண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் மனைவியும், குலு அரச குடும்பத்தின் குல தெய்வமுமான ஹதிம்பாவுக்கும் இங்கு கோயில் உள்ளது. இந்த கோயில் கட்டடக் கலையின் ஒரு சிறப்பாக நான்கு அடுக்கிலான பகோடா பாணியிலான கோயிலாக உள்ளது. இதில் ஏராளமான நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கோயில் ஒரு குகையை ஒட்டி கட்டப்பட்டுள்ளது. 1553ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பாதத் தடங்கள், பெண் தெய்வம் ஹதிம்பாவுடையது என்று கருதப்படுகிறது. துங்கிரி வன் விகார் என்ற பகுதியில் அமைந்திருப்பதால் இந்த கோயில் துங்கிரி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மணாலியில் உள்ள மலை மீது நான்கு கிலோ மீட்டர் தூரம் ஏறிச் சென்றால் வசிஷ்ட முனிவரின் கோயிலும் உள்ளது. அதன் அருகே இயற்கையான கந்தக நீரூற்று அமைந்துள்ளது. இந்த நீரூற்று வெதுவெதுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இதில் காலை நனைத்தால் மட்டும் போதும், புத்துணர்ச்சி நம்மைத் தொற்றிக் கொள்ளும்.
அடுத்து, சிவபெருமானிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக அர்ஜூனன் கடுந்தவம் செய்த இடமும் இங்கு அர்ஜூனா குபா என்று பிரபலமடைந்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கம்பளி ஆடைகள், அழகிய ஷால்களை நிச்சயமாக வாங்கிச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல், உள்ளூர், லடாக் பகுதி மற்றும் திபெத் கைவினைப் பொருட்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன. சாலையோரக் கடைகளில் பச்சை ஆப்பில், பல்வேறு விதமான ஊறுகாய் வகைகள், குங்குமப் பூ, மருத்துவ குணம் கொண்ட ஜின் செங் வேர் போன்றவைகளும் விற்கப்படுகின்றன.
மணாலியின் தட்பவெப்பநிலை பெரும்பாலும் குளிர்காலங்களில் மிகக் குளிராகவும், கோடைக் காலங்களில் சுமாரான குளிருடனும் இருக்கும். மேலும் ஆலங்கட்டி மழை பெய்வதும் இங்கு அதிகம். நவம்பர் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கம்.
மணாலி டெல்லியுடன் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை 21 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 1 வழியே இணைக்கப்பட்டுள்ளது, நியூ டெல்லியில் இருந்து மணாலிக்கு செல்லும் வழியில் அரியானாவின் பானிபட் மற்றும் அம்பாலா ஆகிய நகரங்கள், சண்டிகர், பஞ்சாபின் ரோபார், மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர், சுந்தர்நகர், மற்றும் மாண்டி ஆகியவை அமைந்துள்ளன.
மணாலிக்கு அருகே எந்த ரயில் நிலையமும் அமைந்திருக்கவில்லை. சண்டிகர் (315 கி.மீ.), பதான்கோட் (325 கி.மீ.) மற்றும் கால்கா (310 கி.மீ.) என ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி பிறகு சாலை மார்கமாக செல்லலாம். மணாலிக்கு அருகே அமைந்துள்ள குறுகிய பாதை ரயில் முனை ஜோகிந்தர் நகர் (135 கி.மீ.) ஆகும்.
மணாலிக்கு அருகே பூந்தார் விமான நிலையம் அமைந்துள்ளது. இது மணாலியில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. |
No comments:
Post a Comment